கோயில்களில் தமிழ்; காந்திஜி கூறியது என்ன?

By லா.சு. ரங்கராஜன்
First Published : 20 October 2012 01:19 AM IST

தமிழிசை, தமிழில் கல்வி, நீதிமன்றங்களில் தமிழ் என்றெல்லாம் முயற்சி செய்து முழுமனதோடு செயல்படுத்தாமல் விட்டுவிட்டு முத்தாய்ப்பாக இப்போது “”கோயில் வழிபாடுகளில் தமிழ்மட்டும்தான் வேண்டும்” என்று ஊடுருவ சிலர் முனைந்துள்ளனர்.

கோயில் பூஜைகள், குடமுழுக்கு, வாழ்வியல் சடங்குகள் அனைத்தையும் தமிழ்மயமாக்கும் முயற்சியில் இப்போது ஆத்திகத் தமிழ்ப் பெருந்தகைகள் “தமிழ் வழிபாட்டு வெற்றிவிழா’ என்ற பெயரில் இறங்கியுள்ளனர்.

பண்டைய தமிழ் மன்னர்கள் தாங்கள் எழுப்பிய ஆலயங்களில் முழுக்க முழுக்க தமிழ் வழிபாட்டு முறை மட்டுமே வேண்டும் என்று முயற்சி செய்ததில்லை. ஏன் எனில் அவர்களில் பலருக்கு இவ்விரு மொழிகளிலும் புலமையும் ஈடுபாடும் இருந்தன.

சங்ககாலத் தமிழ்ப் புலவர்களோ, சைவ சமயத் திருக்குரவர்கள் நால்வருமோ அல்லது வேறு யாருமோ வடமொழி வழிபாட்டை ஆட்சேபித்ததாகக் கூட தகவல்கள் இல்லை. பிற மாநிலங்களில் தாய் மொழி அபிமானிகளான மலையாளிகளோ, கன்னடியர்களோ, தெலுங்கர்களோ கூட தாய்மொழியில்தான் வழிபாடு வேண்டும் என்று வாதாடவில்லை.

தமிழ்நாட்டில் சென்ற நூற்றாண்டு இறுதிவரை இத்தகைய பிரச்னை எழவில்லை. “மக்களுக்குப் புரியாத வடமொழி எதற்கு?’ என்று கேட்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியப் பாடல்களைப் படித்துக்காட்டினால் இப்போதுள்ள தமிழனுக்குப் புரியவில்லை என்பதற்காக அந்த சங்ககாலப் பாடல்களை இனி மறந்துவிடலாம் என்றால் எவ்வளவு சரியோ அவ்வளவு சரி வடமொழியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும்.

கோவிலே நம்பிக்கை உள்ளவர்களுக்காகத்தான்; சைவ ஆகமங்கள், பூஜை முறைகள், வழிவழியாகத் தொடரும் சம்பிரதாயங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை வாய்ந்தவரும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முந்தைய கோயில் களஞ்சியத் துறையில் பங்கு வகித்தவருமான பூசை ச. ஆட்சிலிங்கம் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், “”மனத்துக்கேற்ப பூஜை முறைகளில் தமிழைப் புகுத்திவிட்டால் காலப்போக்கில் மூலமும் வழக்கொழிந்து சிதைந்து, மொத்தமும் வீணாகிவிடும் அபாயம் உள்ளது” என்று எச்சரித்துள்ளார். (தீபம் – அக்டோபர் 5 இதழ்).

வடமொழி வேண்டும் என்று கூறுகிறவர்கள் தமிழுக்கு எதிரிகளோ வடமொழி வெறியர்களோ அல்லர். சொல்லப்போனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அந்த மொழியே தெரியாது. தங்களுடைய முன்னோர்கள் செய்துவந்த காரியம் தங்களுக்குக் கெடுதலானதாகவோ அவமானத்தை ஏற்படுத்துவதாகவோ இருந்திருக்க முடியாது என்ற நல்ல நம்பிக்கையிலும் வழிபாடு என்பதில் ஆன்றோர்கள் கடைப்பிடித்த முறையே சிறந்தது என்ற நல்லெண்ணத்தாலும்தான் ஆதரிக்கிறார்கள். இதைத் தமிழுக்கு விரோதமான செயல் என்று கற்பிதம் செய்துகொள்வது வருத்தத்தைத் தருகிறது.

தமிழ் வழிபாடுகளை உருவாக்கும் புது இயக்கத்தில் இருபெரும் காந்தியவாதிகளும் ஆன்றோர்களும் இணைந்துள்ளனர். இப் பிரச்னை குறித்து மகாத்மா காந்தி கூறியுள்ளதை அவர்களுடைய பரிசீலனைக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

28-3-1926-இல் “நவஜீவன்’ என்ற தமது வாராந்திர இதழில் ஒரு வாசகரின் கேள்விக்குப் பதிலாக இதை அவர் தெரிவித்துள்ளார்.

“”அனைத்து ஹிந்து சமயச் சடங்குகளிலும் சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது அபிப்ராயம். ஒரு மொழிபெயர்ப்பு எவ்வளவுதான் சிறப்பாக இருப்பினும் மூல மந்திரங்களில் உள்ள பல சொற்களில் பொதிந்துள்ள பொருளின் ஒலிநயத்தைப் பிரதிபலிக்க இயலாது.

மேலும் பிராந்திய மொழியில் வழிபாடுகள் ஓதப்படுவதோ அல்லது மொழிபெயர்க்கப்பட்ட வாசகங்களோ போதுமானது என்கிற மன நிறைவு ஏற்படின், ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பயபக்தியுடன் ஓதப்பட்டு, தூய்மை மெருகேறிய சமஸ்கிருத மொழி சுலோகங்களின் புனிதத் தன்மை குறைந்துவிடும்.

அவ்வாறாயினும், அவசியம் நேர்ந்தால் ஒவ்வொரு சுலோகத்தின் அர்த்தத்தைக் கூடியுள்ள மக்களின் தாய்மொழியில் விளக்குவதில் தவறில்லை என்பதும் என் கருத்து”. (கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி”, நூல் 30, பக்கம் 195).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s