சைவமும்சமஸ்கிருதமும்-3

திருமுறை மந்திரங்கள்
தேவார முதலிய திருமுறைகளுள; அவற்றிலிருந்து சிலபலபதிகங்களையாவது, பாடல்களையாவது, பாதங்களை யாவது. பதத்தொடர்களையாவது, பதங்களையாவது எடுத்து வரிசைப்படுத்தி அக்கோவையை மந்திரங்களெனக் கொள்ளலாம். இப்படிக் கூறுவர் அந்நவீனர்.

தமிழகத்துச் சைவாலயங்கள் பல. அவற்றில் தேவாரத்திகள் ஓதப்பட்டே வருகின்றன. அவற்றை ஓதிவருபவர் ஓதுவார். அந் நியமந் தொன்றுதொட்டது. அவ்வாலயங்களில் திருவுருவங்களுள. அவற்றிற்கு உபாசாரங்கள் செய்யப்படும். அவற்றுள் அவ்வோதுகையுமொன்று. அதற்கும் அந்நவீனர் விரும்பும் அக்கோவையை ஓதுகைக்கும் வேறு பாடென்னை?

எல்லாரும் ஞானவாக்கின் விதிப்படியே யொழுக வேண்டும். அப்படியொழுகாதவரைப் பிறப்பிறப்புக்கள் விடா. தேவார முதலியவற்றின் ஆசிரியன்மார் தம் முன்னைப் பிறப்புக்களில் அவ்விதியைக் கசடறக் கற்றனர்.  கற்றபின் அதற்குத் தக நின்றனர். அவர்க்கு முத்தி சித்தித்தது.  அவ்வேதாகமங்களே கற்பவை யென்ற உண்மையை அவர் அனுபவித்துக் கண்டனர். ஆகலின் அவரருளிய தேவராதிகள் அனுபவ வாக்கெனப்பட்டன.

திருமுறைப் பாடல்கள் பல்லாயிரம். அவற்றுள் அவ்வாசிரியன்மார் தம்மைப் பற்றியுங் கூறியிருக்கின்றனர். ‘நான்மறை வல்ல ஞானசம்பந்தன்’, ‘நான்மறை யங்கமோதிய நாவன் – வன்றொண்டன்’, ‘செழுமறை தெரியுந்திகழ்கருவூரன்’, ‘மறைவல வாலி’, ‘மாசிலா மறைபலவோது நாவன் வண்புருடோத்தமன்’, என்பவற்றை நோக்குக. அவரெல்லாங் சம்ஸ்கிருத சதுர்வேத விற்பன்னரென்பது விளங்கும். அவர் தம் பாடல்களைப்பற்றியும் பேசினர்.  ‘ஆரணம் பொழிந்த பவளவாய் சுரந்த வமுதமூ றியதமிழ் மாலை’, ‘ஆரணத் தேன்பருகி யருந்தமிழ் மாலை கமழவரும்’, என்பன காண்க. திருமுறைகள் வேதக்கருத்தையே பிரதிபலிக்கின்றன வென்பது விளங்கும். ஆனால் ஒருவகையில் அவரெல்லாம் ஒருமுகமான எச்சரிக்கையுட னிருந்திருக்கின்றனர். என்னை? தம் பாடல்களை வேதமென்றோ, மந்திரமென்றோ, அவற்றிற்குச் சமமென்றோ அவர் புகழவில்லை.

ஆனால் அவர் ‘மந்திர வேதங்கள்’, ‘மந்திரத்தமறை’, ‘மந்திரமறை’, ‘மந்திர நான் மறை’, ‘மந்திர மாமறை’, என்று பாடினார். சம்ஸ்கிருத வேதங்களே சர்வ மந்திரங்களுக்கும் ஆகரம். அவ்வுண்மையை அவ்வடிகள் ஏற்றுள்ளன. வேதம் மந்திர மயம்; அதனால் மந்திரமென்ற பெயரும் பெற்றது. ‘மந்திரமுந் தந்திரமுந்தாமே’ என்றது காண்க.

மந்திரம் – வேதம்; தந்திரம் – சிவாகமம். ‘இருக்குருவா மெழில் வேதம்’ என்றது பத்தாந் திருமுறை. இருக்குரு- மந்திரவடிவம்.

இன்னும் ‘நன்றுமிகு நாண்மலரா னல்லிருக்கு மந்திரங்கொண் – டொன்றிவழி பாடுசெயலுற்ற வன்ற னோங்குயிர் மேற் — கன்றிவரு காலனுயிர் கண்டவனுக்கன்ற ளித்தான் – கொன்றைமலர் பொன்சொரியுங் கோளிலியெம் பெருமானே’, ‘வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் – போதத்தால் வழிப்பட்டான்’, ‘நலமலி தருமறை மொழியொடு… … …மலரவை கொடுவழிபடுதிறன் மறையவ னுயிரது கொளவ… … …மற லிதனுயிர் கெடவுதை செய்தவன்’ என்றது திருமுறை. அவற்றிலுள்ள இருக்குமந்திரம் வேதத்தின் மந்திரம். மறைமொழி யென்பன வொன்றே. இருக்கு மந்திரத்துக்கு நல் என்பதும், மறைமொழிக்கு நல மலிதரு என்பதும் விசேடணங்கள்.  அவற்றையுங் கருதுக. போதத்தால் வழிபட்டான் என்றுமிருக்கிறது, போதம் – ஞானம். வேதமந்திரத்தால் வழிபடுவதே ஞானவழிபாடு அது விளக்கம். வேறு மந்திரங்களால் வழிபடுவது மூட வழிபாடு. அது தொனி. சம்ஸ்கிருத வேத மந்திரங்களே மந்திரங்கள். அவைகொண் டர்ச்சிப்பதே அர்ச்சனை. எமபயம் நீக்கினதே அதற்குச் சாட்சி. நீத்தார். அதற்கேற்ற மந்திரங்களை வேதத்திலிருந்து கண்டெடுத்தானே அம்மறையவன். அதுவே அவனுடைய திறல். அம்மந்திரங்களையப்படி வந்தித்தன

திருமுறைகள்.

ஆகவே வேதத்தை விட்ட அறமில்லை. அப்படியே திருமுறைகளும் வேதத்தை விடா. ஆகலின் வேதத்தை விசுவசிப்பவரே அவற்றை ஓதுதற் குரியார். அவையும் அவருக்கே அனுக்கிரகிக்கும். வேத நிந்தகர் அவற்றையும் நிந்திப்பவரே. அவர் அவற்றை வேறெப்படியும் போற்றுக, ஓதுக, அவை அவரைக் கண்டு நாணி விலகும். அவ்வோதுகை வெறும் ஆரவாரம், ஆதலின் ஞானவாக்கின் ஸ்தானத்தில் ஞான வாக்கு இருப்பதாக, அதை அநுசரித்த ஸ்தானத்தில் அனுபவ வாக்கு இருக்க வேண்டும். அனுபவ வாக்கை என்ன வகை செய்தும் ஞானவாக்கின் ஸ்தானத்தில் வைக்கக்கூடாது. வைத்தால் அவ்விரு வாக்குகளுமே அவமதிக்கப்பட்டனவாகும். சைவாலயங்களில் சம்ஸ்கிருத வேத மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன. பின்னர் தான் தேவாராதிகள் ஓதப்படும். அம்மரபைக் காண்க.

வேதம் பதிகப் பாகுபாடுக ளுடையது. தேவாரமும் அப்படியே. வேதத்தை அனுசரித்தது தேவார மென்பதை அதனாலுந் தெரியலாம்.
அர்ச்சனை பாட்டே யாகும்’ என்றது பன்னிரண்டாந் திருமுறை; ஆதலின் அர்ச்சனைக்கு திருமுறைகளை ஓதினாலென்ன? என்பர் அந்நவீனர்.  அப்பாட்டாவது ஏழாந் திருமுறை. அதைப் பாடியவர் சுந்தரர். அவர் எந்தச் சைவாலயத்திலாவது பதிகங்கள் பாடி அர்ச்சனை செய்திருக்கின்றனரா? இல்லை. ஆகையால் அவ்வடி அந்நவீனர் கொள்கைக்கு இசையாது. அர்ச்சக குலத்தினராகிய அச்சுந்தரரை மாத்திரம் ‘நீ அர்ச்சனை செய்ய வேண்டாம்.  நம்மைப்பாடிக்கொண்டே யிரு. போதும். உன் பாடல்களையே நாம் அர்ச்சனையாக ஏற்றுக் கொள்வோம்’ என்று பரமசிவனார் அனுமதித்தார்.  அர்ச்சனைக்குப் பாட்டு என்றில்லை. பாட்டே அர்ச்சனை. அவ்வேறுபா டறிக.

இனிக், கைவல்ய நவநீத முதலியன மாயாவாத நூல்கள். பிரபுலிங்க லீலை முதலியன ஐக்கியவாத நூல்கள். வடலூர் இராமலிங்கர் சைவசமய்த்தவ ரல்லர். அதை அவரே சொல்லி விட்டார். அவர் பாடியவும் பல. நான் போன்ற ராக்கும் பாடல் களுமுள. அவையுங் கணக்கில. அவையெல்லாந் தமிழே.  அவற்றிலுஞ் சிவதுதிகள் மிகுதி. சைவாலயங்களில் அர்ச்சனை யாதியவற்றிற்கு அவற்றிலிருந்துந் தமிழ் மந்திரங்கள் திரட்டலாமா? ஆகாதா? ஆமெனின், அப்பாடல்களோடு திருமுறைப் பாடல்களுஞ் சமமென்றாகும்.  அதுவுந் திருமுறை நிந்தையே. ஆகாதெனின், அவற்றின் தமிழை நிந்தித்த தாகும். அந்நவீனருக்கு அது நியாய மன்று.

தமிழகத்தில் சைவாலயங்கள் முந்தித் தோன்றின. திருமுறைகள் பிந்தியவை.  அம்முந்திய காலத்தில் அவ்வாலயங்களில் எந்தத் தமிழ் முறைகள் மந்திரங்களாக ஓதப்பட்டன? சம்ஸ்கிருத வேத மந்திரங்களே இன்றே போல் அன்றும் ஓதப்பட்டன.

அவ்வோதுகைக்கு முந்திய காலமென்பதில்லை.  இருந்தால் அது சைவாலயங்களுக்குந் தோன்றாத காலமே யாம்.

சிருட்டி மந்திரங்கள்

நினைப்பவரைக் கரை சேர்ப்பது மந்திரம். அப்பொருள் கொண்ட மந்திரங்கள் சம்ஸ்கிருத வேதத்திற்றா னுள. தவமுடையார் நிற்கு முறையில் நிற்பர்; அவற்றை ஓதுமுறையில் ஓதுவர். அதனால் தம்மை நிறைமொழி மாந்தராக்கிக் கொள்வர். அவரே நீத்தார்.

ஒவ்வொரு மந்திரத்தையும் ஒவ்வொரு தேவதை அதிட்டிக்கும். அவர் அம்மந்திரத்தைச் செபிக்கும்போது தம்மை அத்தேவதையாகப் பாவிப்பர். அதனால் அவரிடம் ஒரு சக்தி பிறக்கிறது. அது தான் சாபானுக்கிரக சக்தி. அவர் தீயவரைச் சபிப்பர்.  நல்லவரை அனுக்கிரகிப்பர். அச்சாபானுக்கிரவசனங்கள் மந்திரங்களென உபசரிக்கப்படும். செபிப்பவரை நிறை மொழி மாந்த ராக்குவது சம்ஸ்கிருத மந்திரம். தொல்காப்பியத்தில் தமிழ் மந்திரமென வொன்றுளது. அது தான் அச்சாபானுக்கிரக வசனங்கள். அது செபிப்பதற்குரிய தன்று. செபிப்பவரை நிறைமொழி மாந்த ராக்கவுஞ் செய்யாது. அதனையே அந்நூல் மறைமொழி யென்றது.

திருக்குறளிலுள்ள மறைமொழியும் அதுவே. திருமுறைகள் சொன்ன ‘மறைமொழி’, ‘வேத மொழி’ கள் சம்ஸ்கிருத வேத மந்திரம்.

தொல்காப்பியரும் வள்ளுவருங் கூறிய மறைமொழிகளும், மந்திரத்துக்கும் மதமும் மறுப்புமான விருத்தியுரையில்லை. ‘மந்திரப் பொருட்கண் அப்பொருட்குரித்தல்லாச் சொல் வருவனவும் என்றவாறு. இதற்குகாரணம் மந்திர நூல் வல்லார்வாய்க் கேட்டுணர்க’ எனவும், ‘அவர், ஆணையாற்கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமன் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொட ரெல்லாம் மந்திரமெனப்படும் என்றவாறு. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க……இவை தமிழ் மந்திரம்….’ எனவுமே இப்போதுள்ள தொல்காப்பியவுரை யிருக்கிறது. மந்திரப் பொருட் கண் அப்பொருட்குரித்தல்லாச் சொல் வருவதெற்றுக்கு? ஆணையாவது யாது? அதற்கும் அவர்க்கு முள்ள சம்பந்தமென்ன? புறத்தா ராவார் யார்? புலனாகாம லென்பதெது? மறைத்துச் சொல்வானேன்? இவ்வினாக்கள் எழுகின்றன. விடை வேண்டும். அந்நவீனரால் தரமுடியுமா? மந்திரமும் அதன் பொருளும் எல்லார்க்கும் புலனாக வேண்டும்: அவர் கொளகை அது. அதற்கு அத்தமிழ் மந்திரமாவது பொருந்துகின்றதா? இல்லை.

இன்னும் திருமுறைகளில் மந்திரப் பொருளின் கண் அப்பொருட்கு உரித்தான சொல்லே வந்துள்ளது. அந்நூல்களின் பொருள் புறத்தார் முதல் எல்லார்க்கும் புலனாகும் என்று கொண்டால் அவை தொல்காப்பியவுரையின் படி மந்திரங்க ளாகா. அவற்றில் மந்திரப் பொருளின்கண் அப்பொருட்கு உரித்தல்லாத சொல்லே வந்துள்ளது. அவற்றின் பொருள் புறத்தார் முதல் யாவர்க்கும் புலனாகாது என்று கொண்டால் அவை நவீனரின் கொள்கைப்படி மந்திரங்களாகா. ஆகவே அவ்வுரைப் பகுதியால் அவராசை தீருமாறில்லை.
அன்றியும் அவ்வுரைப்பகுதித் தமிழ் மந்திரத்துக்கு உதாரணத்தோடு கூடிய விளக்கம் வேண்டும். மந்திர நூல் வல்லாரே அதனைத் தரக்கூடியவர்.  அவ்வுரைக்காரர் அப்படிச் சொல்லிக் கையை விரித்து விட்டார். தமிழ் மந்திரநூல் உண்டா? அதில் வல்லா ருளரா? அவர் விளக்குந் தருநாள் என்று?  அன்றுவரை அப்பகுதியை ஒதுக்குக. மந்திர விசாரணைக்கு அது உதவாது.  மேலும் தமிழ்மந்திரமென்ற பிரஸ்தாபம் அ·தொன்றுதான். அது பிற பிரமாணங்களால் வலியுறவில்லை. அந்நவீனர் அதனை யெடுப்பானேன்? விளம்பரஞ் செய்வானேன்? ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்றோ ரறிவாராய்ச்சி நூலுள்ளது. திரு.மா.சாம்பசிவம் பிள்ளையவர்கள் அதனாசிரியர்.  தமிழ் மந்திரமென்பது முதலிய பல அசைவக் கொள்கைகள் அதிற் சர்ச்சை செய்து மறுக்கப்பட்டுள்ளன. அந்நூலிற் காண்க.

நிற்க, தமிழ்மந்திரங்க ளில்லை யாகுக: அவற்றைப் புதியவனாகச் சிருட்டித்துக் கொள்ளலாம்: அப்படிக் கூறுவர் அந்நவீனர். சீடர்களின் பக்குவத்தில் தாரதம்மியமுண்டு. அதற்கேற்ப ஆசிரியன் அவருக்கு மந்திரோப தேசஞ் செய்வான். அவனும் மந்திரங்களைச் சிருட்டித்துபதேசியான். அவனுக்கே அவ்வுரிமை கிடையாது. தகுதியுமில்லை. அந்நவீனர்க்கு மாத்திரம் அவை வந்துவிடுமா? அவருக்குங் குருபரம்பரை யிருக்கலாம். அதில் எத்தனையோ குருமார் வந்திருப்பர். அவருள் யாராவது மந்திரத்தைச் சிருட்டித்து உபதேசித்திருக்கின்றனரா? இப்போதும் ஆதீன பீடாதிபதிக ளுளர். அவருந் தமக்கு முந்திய ஆசாரியரிடம் உபதேசங்கேட்டவர் தான். அது திருமுறை மந்திரமா? தொல்காப்பியத் தமிழ் மந்திரமா? சிருட்டி மந்திரமா? அவற்றுள் எதுவு மன்று. அவர் கேட்ட வுபதேசம் வேதாகமோத்த சம்ஸ்கிருத மந்திரமே.  மேலும் மந்திரத்தை அவரவரே சிருட்டித்துக் கொள்ளட்டும்: குருபரம்பரை குலைந்தேபோம். ஒருவேளை அந்நவீனருக்குச் சற்குரு ப்ரம்பரையில்லையோ? இல்லையென அவர் சொல்லட்டும். பிறகு அவர் தம்மனம்போற்செய்க. அன்றியும் மந்திரங்களே மற்றவற்றைச் சிருட்டிக்கும்.  பெரியோர் கருத்தது. அந்நவீனர் மந்திரங்களையே சிருட்டிக்கப்பட்டு விட்டனரா? அவருக்கு அச்சிருட்டிசத்தி வந்தவாறெங்ஙனே? மந்திரசிருட்டி சத்தி முன்னது. அதன் விளைவாய்ப் பின்னது அம்மந்திரம். இப்பின்னது அம்முன்னதை எய்துவியாது. ஆகலின் அம்மந்திர செபம் அவருக்கு வேண்டாம். அதனைப் பிறகும் விரும்பா. தமக்கு வேண்டும் மந்திரத்தை அவருஞ் சிருட்டித்துக் கொள்வர். சைவ சமய வரம்பு அழிக்கப்பட்டுவருங் கால மிது. ஆகலின் அவரவ ரறிவே அவரவருக்கு வழியுந்துணையுமாம். ஆனால் அச்சிருட்டி மந்திரங்கள் அவரவர் வீட்டிலோ, ஏட்டிலோ இருந்திடுக.  சைவாலயங்களில் அவை நுழையக்கூடாது. சிவாகமங்கள் அனுமதிக்கவில்லை.

மனங் கலந்த பத்தி

தமிழருக்கு மனங் கலந்த பத்திவழிபாடு வேண்டும். அதற்கு சம்ஸ்கிருத மந்திரங்கள் உதவா, அவற்றின் பொருள் விளங்காது. தமிழ் மந்திரங்கள் பொருள் விளங்குவன, அவையே அப்பத்தி வழிபாட்டிற்கு உதவும்: இதுவும் அந்நவீனர் கூற்று. நோய்கள் மணிமந்திர மருந்துக்களால் தீரும். மாந்திரீகன் நோயாளிமுன் செபிக்கிறான். அச்செபம் பெரும்பாலும் மானதம் அல்லது மந்தமாகவே யிருக்கும். நோயாளிகன் காதில் அம்மந்திரமே விழாது. அவன் அதன்பொருள் தெரிவதெங்கே? ஆயினும் அவன் நோய் நீங்குகிறது. மந்திர சப்தமும் அர்த்தமும் விளங்காத அவன் சுகமடைகிறான். இனி மாந்திரீகருட் பலர் மந்திரங்களைச் செபிப்பர், சக்கரங்களுள் எழுத்துக்களை அமைப்பர்.  ஆயினும் மந்திரப்பொருளை யெல்லாம் அவர் அறிந்தவர்தானா? சொல்லமுடியாது. எனினும் அவர் செபம் பலிதமே. அது கண்கூடு. அந்நவீனர் கொள்கை அவ்வகையில் தளர்கிறது.

மந்திரப் பொருள் விளங்கவே வேண்டுமோ? அந்நியாயம் சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு மாத்திரந்தானா? தமிழ் மந்திரங்களுக்கு மாகும். அப்போது தான் அம்மந்திரங்களாலும் மனங்கலந்த பத்திவழிபாடு சித்திக்கும். ‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார்’ என்றது திருவாசகம். அதிலுள்ள ‘உணர்ந்து சொல்லுவார்’ என்பதை நோக்குக. உணர வேண்டுவது எதை? சொல்லவேண்டுவது எதை? உணரவேண்டுவது பொருளை. ஆனால் சொல்ல வேண்டுவது பாட்டையே, சொல்லுவர் – ஓதுவார். சம்ஸ்கிருத மந்திர விஷயத்திலும் அதுவே கொள்ளற்பாலது. அம்மந்திரங்களின் பொருளைத் தெரிக. ஆனால் அம்மந்திரங்களையே ஓதுக.  பாட்டிற்கு உரை தெரி, அவ்வுரையையே ஓது. பாட்டை விடு என்று அவ்வடிகள் உபதேசிக்கவில்லை.

இனிப்பொருள் தெரிவ தெப்படி? பொருள் இரண்டு வகை. இல் என்பது ஒரு சொல். அது இலக்கிய வழக்கு. அதற்குப் பொருள் வீடு என்பது. அதுவும் ஒரு சொல்லே. அது உலக வழக்கு. அப்படி ஒரு சொல்லுக்கு இன்னொரு சொல்லைப் பொருளாகக் கொள்வது ஒன்று. இல் என்பது கல் மண் கட்டை கண்ணம் முதலியவற்றா லாயதொரு கட்டடம். அதனைப் பொருளாகக் காண்பது மற்றொன்று. மூன்றாம் வகையில்லை. சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இரண்டாம் வகைப் பொருள் முனைப்புடையவராற் காணமுடியாது. முதல் வகைப் பொருள் தெரியாதிருப்பதையே அந்நவீனர் எடுத்துக் காட்டுவர். எல்லாத் தமிழ்ச் சைவரும் சம்ஸ்கிருதப் பயிற்சி பெறுக. அத்தெரியாமை தீரும். அதற்கு அப்பயிற்சி யொன்றே வழி. அதுவரை அம்மந்திரங்களுக்குத் தமிழில் உரை தரச்சொல்லித் தெரிக. தம் சமயத்தின் பொருட்டு அவர் அவ்வளவாவது சிரமப்படுக. அத்திறமுங் கெட்டவர்க்கு வாயேன்? அப்படி எவரும் அம்மந்திரங்களுக்கு எந்தப் பிரதி பதங்களாலும் அர்த்தந் தெரியலாம்.  ஆனால் அம்மந்திரங்களையே ஓத வேண்டும். மந்திர மென்ற பெயருக்கு அவையே முற்றிலுந் தகுதியுடையன. அவற்றின் பிரதி பதங்களும் பின்ன பதங்களும் அவை யாகா.

தமிழிர் சைவ நூல்கள் பல. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே அவை அவ்வப்போது இயற்றப்பட்டன. அவை மங்கலத் தமிழ், சின்மயத் தமிழ், மதுரத் தமிழ், மடமடை யுடைத்து வளர்ந்த தமிழ். அவை செம்பாடல்களாயுயிருக்கும். சிறந்த வசனங்களாயுமிருக்கும். அவற்றின் ஆசிரியன்மார் மனங்கலந்தசிவபத்தி வழிபாடு முதிரப்பெற்றவர். இன்றேல் அன்ன நூல்கள் தோன்றியிரா. அவர்பாலிருந்த அப்பத்தி வழிபாட்டிற்கு அவையே சான்று. இனி நூலியற்றாமற் காலஞ்சென்ற சைவரும் எண்ணற்றவர். அவ ரெப்படி? அவருள் எத்தனையோ பேர் சைவவரம்பு கடவாதவர். சிவதீக்ஷ¡வான்கள், விபூதி ருத்ராக்ஷதாரண சீலர். சிவபூஜாதுரந்தரர், சைவாலயங்களில் நித்திய நைமித்திகாதிகளை ஆகமமுறையில் நடத்தி மகிழ்ந்தவர், அச்சேவையில் தினந்தோறும் திளைத்தவர். ஏனைய ஆசாரங்களிலுங் குறையாதவர், இருமொழிச் சைவ நூல்களிலும் வல்லவர், சத்தியம், அஹிம்ஸை, பரோபகாரம் முதலிய சாதாரண தருமங்களிலுஞ் சிறந்தவர். இன்னும் என்ன வேண்டும்? அவர் வாழ்ந்த காலங்களில் சைவாலயங்களில் தமிழ் மந்திரங்களா ஓதப்பட்டன?  சம்ஸ்கிருத மந்திரங்களே ஓதப்பட்டன. அவை அச்சிவ புண்ணிய சீலரின் மனங்கலந்த பத்திவழி பாட்டைச் சிறிதுந் தகையவில்லை. பெரிதும் வளர்த்தே வந்தன. அவ்வுண்மையை யாராலும் மறுத்துரைக்க முடியாது.

அது சில வருடங்களுக்கு முன்வரை யுள்ள நிலை. இப்போது எப்படி? அந்நிலை மாறியது. அந்நவீனர் ஆங்காங்கே தோன்றினர். அவருக்குச் சம்ஸ்கிருத தூஷணமே ஆசைத்தொழில். அதுவே தமிழ் வெறியாயிற்று. அவ்வெறி கொண்ட சுவடிகள் மலிந்தன. அவற்றில் தமிழ்மொழி ஒரு தெய்வமாகக் கற்பிக்கப்பட்டது. பிறமொழிகள் எத்தனை? அவற்றுக்குரியாருமுளர். அவர் அவற்றை அப்படிக் கற்பிக்கவில்லை. அந்நவீனரே தம் சுவடிகளில் அக்கற்பனை செய்தனர். அத்தெய்வத்துக்கே தம் மனங்கலந்த பத்தி வழிபாட்டை அவை சமர்ப்பித்தன. அவ்வழிபாட்டிற்கு அர்ச்சனை மந்திரங்கள் வேண்டுமே. அத்தூஷணங்களே அம்மந்திரங்கள் அவை அச்சுவடிகளில் நிரம்பக் கிடைக்கும். அந்நவீனரே அவ்வர்ச்சகர். இப்போது அத்தெய்வமே கானல்நீர் போற்காட்சி யளிக்கிறது. அதனால் சைவ சமயம் அந்தர்த்தானமாகிவருகிறது. பரமசிவனாரும் அப்படியே. மனங்கலந்த சிவ பத்தி வழிபாடு எங்கிருக்கும்? அதுவுங் குறைகிறது. அதற்குக் காரணம் சம்ஸ்கிருத மந்திரமா? அன்று. அந்நவீனரின் தமிழ் வெறியே.

அவர் கொள்கைப்படி மற்ற மகாணங்களின் மக்களுக்கும் அப்பத்திவழிபாடில்லையென்றே சொல்லவேண்டும். ஏன்? அங்குள்ள ஆலயங்களிலும் சம்ஸ்கிருத மந்திரங்களே ஓதப்பட்டு வருகின்றன. ஆகவே அந்நவீனர் அவரையும் நிந்தித்தவராகிறார். என்னே அவர் தம் செருக்கு!

ஒரு சமயம் பல மொழிகளிற் பிரசார மாகும். எச் சமயத்தையும் அச்சமயிகளே பிரசங்கிப்பர். அவருள் சொந்தமொழி பயின்றார் சிலர். அவர் பிரச்சாரம் அம்மகாணத்தளவி லடங்கும். சொந்த மொழியும் பிற மொழிகள் சிலபலவும் பயின்றார் சிலர். அவர் அப்பிற மொழிகள் வழங்கும் பிரதேசங்களுக்குஞ் செல்வர். அங்கும் அவர் பிரசாரம் நடைபெறும். ஆயினும் அவ்வொரு மொழி வல்லாரும் பலமொழி வல்லாரும் ஒரே சமயிகளே. அச்சமயத்தில் அறிவும் ஆராய்ச்சியும் பற்றும் உடையாரவர். அப்பலமொழி வல்லார் பிரதேசந்தோறுஞ் சென்று அங்கொரு விதமாகவும் இங்கொருவிதமாகவும் பிரசிங்கிப்பாரா?

உலகெங்கும் கிறிஸ்துவ இசுலாமிய பிரசாரம் நடந்து வருகிறது. அப்பிரசாரகர் தமிழில் ஒரு விதமாகவும் தெலுங்கில் இன்னொரு விதமாகவும் துளுவில் மற்றொரு விதமாகவுமா பிரசங்கிக்கின்றனர். இது தமிழ்க் கிறிஸ்தவம். இது தெலுங்குக் கிறிஸ்தவம், இது துளுக் கிறிஸ்தவம் எனப் பேதக் கிறிஸ்தவமுண்டா? எங்கும் ஒரே கிறிஸ்தவம், ஒரே இஸ்லாம். தமிழ்க் கிறிஸ்தவம் உயர்வு, தெலுங்குக் கிறிஸ்தவம் தாழ்வு, அல்லது இது உயர்வு.  அது தாழ்வு என அவ்விருமொழிக் கிறிஸ்தவரும் வாதப்பிரதிவாதங்கள் செய்து கொள்ளார். இசுலாமியரும் அது செய்யார். பிறசமயிகளும் அப்படியே. சமயம் ஒன்றானால் அது எம்மொழியிலும் ஒன்று போலவே பிரசங்கிக்கப்பட்டிருக்கும்.

அந்நவீனர் மாத்திரம் விசேடப் பிறவிகள், மொழியை அடிப்படையாகக் வைத்துச் சமயத்தைப் பிளக்கும் புத்திசாலிக ளவர். அதனால் அவர் தமிழ்ச்சைவம் வேறு. சம்ஸ்கிருத சைவம் வேறு என்பார். தமிழ்ச்சைவம் வாழ்க; சம்ஸ்கிருத சைவம் ஒழிக; தமிழ்சைவ நூல்கள் வாழ்க, சம்ஸ்கிருதச் சைவ நூல்கள் ஒழிக; தமிழ்ச் சைவாசிரியன்மார் வாழ்க, சம்ஸ்கிருத சைவாசிரியன்மார் ஒழிக; தேவாரம் வாழ்க, சுருதி சூக்தி மாலை ஒழிக; சம்பந்தர் வாழ்க, ஹரதத்தர் ஒழிக என கத்துபவர்க்குப் புத்தி சிறிதாவதுண்டா? சைவம் எத்தனை மொழிகளிலிருக்கட்டும். அது ஒரே சமயந்தான். மொழிபற்றி அதை நோக்குவதும் பிளப்பதும், அழைப்பதும் சமயாபிமானமே யாகா, அவற்றில் மொழிவெறியே முனைந்து நிற்கும். சம்ஸ்கிருதச் சைவம் ஒழிக என்றால் சம்ஸ்கிருதம் ஒழிக என்பது தான் கருத்து. தமிழ்ச் சைவம் வாழ்க என்றால் தமிழ் வாழ்க என்பது தான் கருத்து. ஆகவே அப்பிளவு அச்சமயத்தை யழிக்கவே உதவும். ஒரு மொழியில் பல சமயங்களில் இலக்கியங்களிருக்கும்.  அதனால் இந்நூல் சைவத்தமிழ். இந்நூல் வைணவத் தமிழ் இந்நூல் சமணத்தமிழ் எனப் பிரித்தற்கிடனுன்டு. அப்பிரிவால் அம்மொழி பாதகமுறாது.  ஆனால் ஒரு சமயம் மொழிதோறும் வேறுவேறாதலில்லை. அந்நவீனரின் புத்தியே பிளந்தது. இப்போது மனங்கலந்த சிவபத்தி வழிபாடு குறைவே.  அதற்கு காரணம் அப்பிளவைப் புத்திதான்; சம்ஸ்கிருத மந்திர மன்று.

வைணவத்தையும் தமிழ் வைணவம், சம்ஸ்கிருத வைணவம், என அவர் பிரித்துப் பேசுவர். அப்பேச்சைத் தமிழ்வைணவர் சிறிதும் மதியார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s