இந்துமதம்-ஓர்அறிமுகம்

தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பாரத புண்ணியபூமியின் வாழ்க்கைமுறைக்கு இந்துசமயம் என்று பெயர். உண்மையில் இந்துமதம் என்பது ஒரு தனி மதம் அல்ல. அது ஒரு குறிப்பிட்ட, தனிச்சிறப்புமிக்க வாழ்க்கை முறை ஆகும். இந்துமதம் எனும் பெயர் வெளினாட்டினரால் நமக்கு வைக்கப்பட்ட பெயர் வழக்கம்போல் அப்பெயரே நிலைத்துவிட்டது. நம்மவர்கள் அந்த உயர்ந்த வாழ்க்கை நெறியை தர்மம் என்றே அழைத்தனர்.

அந்த தர்மநெறி, வாழும் மக்களின் குணாதிசயங்களை அங்கீகரித்து அவர்கள் தத்தமது தன்மைக்கேற்றாற்போல் தர்மத்தைக்கடைபிடித்து வாழ்வில் முன்னேற வழிவகை செய்துள்ளது. ஆகவேதான் இந்த தர்மம் தன்னை மேற்கொள்ளும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன் பாங்கிற்கு ஏற்றாற்போல் வழிபடும் சுதந்திரத்தையும் சிந்தனை சுதந்திரத்தையும் வழங்கி உள்ளது.

எப்படி இறைவனை, பரம்பொருளை ஒரு வரையறைக்குள் கொண்டுவரமுடியாதோ அதேபோன்று அப்பரம்பொருளை உணரவும், அடையவும் உண்மையாகத் துணைநிற்கும் இந்த தர்மநெறியையும் ஒரு வரையறைக்குள் அடக்க முடியாது.

இந்துமதத்தினரிடையே எந்தகடவுளை வழிபடுவது என்று குழப்பம் உள்ளது, அவர்கள் பலகடவுள்களை வழிபடுகின்றனர், அவர்களுக்கென்று தனியாக எந்தக் கடவுளும் இல்லை, மேலும் இம்மதத்தில் சிவனை வழிபடுபவர்கள் விஷ்ணுவையும், விஷ்ணுவை வழிபடுபவர்கள் சிவனையும் கண்டுகொள்வதில்லை என்றும், இந்துக்கள் கற்களையும் மரங்களையும் விலங்குகளையும் மலைகளையும்கூட வழிபடுகின்றனர் என்றும் சிலர் குறைகூறி வருகின்றனர்.

இந்து தர்மத்தைக் குறை கூறுபவர்கள் அடுத்தகுறையாகக் கூறுவது இந்துமதத்திற்கென்று ஒரு பொது மறை இல்லை என்பதாகும்.

மூன்றாவதாக, இந்துக்களுக்கு கடவுளைப்பற்றிய ஒரு முடிவான கோட்பாடு இல்லை என்பதும் இந்துமதத்தில் பல முறண்பட்ட கடவுட்கோட்பாடுகள் உள்ளன என்பதுமாகும்.

அடுத்தது இந்துக்கள் ஒரேவிதமான நிகழ்வுகளுக்கு (உ-ம் திருமணம் போன்ற நிகழ்வுகள்) வேறு வேறு பகுதிகளில் மாறுபட்ட வேறு வேறு சடங்குகளை மேற்கொள்கிறனர் என்பதும் கூட பெரிய முறண்பாடாக முன்வைக்கப் படுகிறது. ஒவ்வொன்றாக இந்த விமரிசனங்களை ஆராய்வோம்.

முதலில் பலகடவுள்வழிபாடு, கல், மர வழிபாடு என்பது என்ன என்று பார்ப்போம்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி, நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே!
– மணிவாசகர் திருவாசகம்

கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், அவர் தன்னைப் பல்வேறு நாம ரூபங்களாக வெளிப்படுத்திக்கொள்கின்றார். பல்வேறு நாம ரூபங்களில் வெளிப்படும் ஓர் இறைவனை அதே பல்வேறு நாம ரூபங்களில் வழிபடுவது இயல்பானது சிறப்பானது.

இங்கு வழிபடப்படும் திருக்கோலங்களின் அடிப்படையில் ஆறு சமயங்கள் நிறுவப்பட்டுள்ளன அவை

1) சைவம் –  சிவன்

2) காணாபத்யம் – கணபதி

3) கௌமாரம் – முருகன்

4) சாக்தம் – சக்தி

5) வைணவம் – விஷ்ணு

6) சௌரம் – சூரியன்

 

வேறுபடும் சமயமெல்லாம் புகுந்துபார்க்கின்

விளங்குபரம்பொருளேநின் விளையாட்டல்லால்

மாறுபடுங்கருத்தில்லை முடிவின்மோன

வாரிதியினதித்திரள்டோல் வயங்கிற்றம்மா. – தாயுமானவர்

 

எனும் பாடல்மூலம் ஒரேபரம்பொருள் பல நாம ரூபங்களைக் கொண்டுள்ளது விளங்கும்.

 

இந்துக்களுக்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்குமான மறை நூல் வேதம் ஆகும் (ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேதங்கள்). அவற்றின் சாரங்களை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அவற்றிற்கு விளக்கமாக பல நூல்கள் ஏற்பட்டன. அவை மக்களின் மாறுபட்ட தன்மைகளைக் கருதி ஒரே உண்மையை அவர்களனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காக வேதங்களின் சாரத்தை பலவிதங்களில் சொல்கின்றன.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். – ஔவையார்

இந்துமதத்தில் கடவுளைப்பற்றிய கோட்பாடுகள் பலவாக இருப்பதாகத் தொன்றக் காரணம், அவை ஒரே தத்துவமான பரம்பொருளை ஒரேஒரு கோணத்திலிருந்துமட்டும் அணுகாமல் ஒவ்வொன்றும் ஒவ்வொறு கோணத்திலிருந்து அணுகுவதுஆகும்.

இங்கு நாம் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது என்னவென்றால் பல அரைகுறை அறிஞர்கள் கூறுவதுபோல் இந்துசமயத்தில் உள்ள, கடவுளைப்பற்றியகோட்பாடுகள் ஒன்றுக்கொன்று முறண்பட்டவை அல்ல மாறாக இறைதத்துவத்தைப்பற்றிய நமது புரிதலை அவை ஒரு பன்முகத்தன்மைக்கும், ஒரு விரிவான மேம்பட்ட புரிதலுக்கும் இட்டுச்செல்கின்றன. இக்கோட்பாடுகள் தர்சனங்கள் எனப்படுகின்றன.

தர்சனம் என்பதற்கு நாம் ஒன்றைப் பார்க்கும் விதம் புரிந்துகொள்ளும்விதம் என்று பொருள். தர்சனங்கள் ஆன்மிக உலகவாழ்வில் நமக்கு ஏற்படும் குழப்பங்கள்தீர வழிகாட்டுகின்றன. நாம் ஆன்மிக உலக விஷயங்களை எந்த நிலையிலிருந்துகொண்டு புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தி, அவ்விஷயங்களில் தெளிவடைய நாம் பின்பற்றவேண்டிய வழிமுறைகளையும் கூறுகின்றன. வாழ்வில் முன்னேற விரும்பும் அனைவருக்கும் அவை சிறந்த வழிகாட்டிகளாக உள்ளன. அவை

1) நியாயம்

2) வைசேஷிகம்

3) மீமாம்சம்

4) சாங்கியம்

5) யோகம்

6) வேதாந்தம்

இந்த தர்சனங்கள் வாழ்வில் உயரவிரும்புகிறவர்களை படிப்படியாக உயர்த்துகின்றன. ஆகவே அவற்றிற்கிடையே எந்த முறண்பாடும் கிடையாது. தர்சனங்களுக்கு பிரமாணமாக இருப்பது வேதங்களே. தர்சனங்களை வாழ்வில் முன்னறவேண்டும் எனும் நோக்கில் அணுகும்போது மெய்ப்பொருள் விளங்கும். மேம்போக்காக அணுகினால் குழப்பம்தான் மிஞ்சும்.

வேதங்களின் நிறைவு எனப்படுவது வேதாந்த தர்சனம். உபநிடதங்கள் புகட்டுவது இந்த வேதாந்த கோட்பாடுதான். பகவத்கீதையும் உபநிடத சாரமே ஆகும்.

வேதாந்த கொட்பாடுகளை விளக்குபவை வேதாந்த சூத்திர உரைகள் அவர்தம் கோட்பாடுகளும் அவற்றை வழங்கியவர்களும்

ஆதி சங்கரர்

ராமானுஜர்

மத்துவர்

1) அத்வைதம் – சங்கரர்

2) விசிஷ்ட்டாத்வைதம் – ராமானுஜர்

3) துவைதம் – மத்துவர்

ஆகியோர் ஆவர்

இம்மூன்று கோட்பாடுகளையும் சரியாகப் புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம் இல்லாதவர்களும் புரிந்தாலும் புரியாததுபோல் நடிக்கும் சுயநலவாதிகளான வேற்று மதத்தினரும் இம்மூன்றுதத்துவங்களும் ஒன்றுக்கொன்று முறண்பட்டவை என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆன்மிகநிலையில் மேம்பட விரும்பும் ஒருவர் தன்னையும், இறைவனையும், தனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பையும் சிறப்பாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இம்மூன்று கோட்பாடுகளும் உருவாயின. இவற்றை இக்கோட்பாடுகள் தத்தமது நோக்கில் எப்படி விளக்குகின்றன என்பதை ஒரு எளிய உதாரணம்மூலமாகக் காணலாம். இங்கு நீரின் மூன்று நிலைகளான திட, திரவ, வாயு நிலைகளைக்கொண்டு இக்கோட்பாடுகளை விளங்கிக்கொள்ளலாம்.

1) நீர், பனிக்கட்டி, நீராவி ஆகியன ஒன்றுதான் (அனைத்தும் H2O) என்பது அத்வைதம்

2) நீர் திரவம் அதைக் குடிக்கலாம், பனிக்கட்டியைக் குடிக்கமுடியாது கடித்துத்தின்னலாம், நீராவியைக் கடிக்கவும்முடியாது குடிக்கவும் முடியாது என்பது – துவைதம்

3) நீர், பனிக்கட்டி, நீராவி ஆகியன வேறு வேறாக இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றுதான் (H2O) என்பது விசிஷ்டாத்வைதம்.

இங்கு இம்மூன்று கோட்பாடுகளும் கூறுவது உண்மைதான். அவை எடுத்துக்கொண்ட பொருளின் தன்மையை முழுமையாக விளக்குகின்றன. ஆகவே அவற்றிடையே எந்த முறண்பாடும் இல்லை.

மேலும் வாழ்வின் அனைத்து அம்சங்களிளும் வழிகாட்டுவதற்காக நீதி நூல்களும்,ஆகமங்களும் இதிஹாசங்களும், புராணங்களும் ஏற்பட்டுள்ளன.

ஒவ்வொரு தனிப்பட்ட மக்கள்குழுவும் தமக்கென்று தனிப்பட்ட சடங்குகளைக்கொண்டுள்ளன அவை அவர்கள் வாழும் நிலை, இடம் சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன அவற்றை உள்ளவாறே அனுமதிப்பதுதான் பரந்தநோக்கம்கொண்ட இந்துமதம் போன்ற தர்மத்துக்கு அழகாகும். இடம், பொருள், சூழல் ஆகியவற்றைக்கருதாது உடைமுதற்கொண்டு வாழ்வியல்முறைகள் அனைத்திலும் கட்டுப்பாடுகள் விதிப்பது இயற்கைக்கு ஒவ்வாதமுறை ஆகும். மேலும் சடங்குகளைக் கொண்டு மட்டுமே ஒரு சமயத்தை வரையறைசெய்வது சரியானதாக இருக்காது.

இந்துமதத்தின் மாபெரும் குறையாகக் கூறப்படுவது இந்திய சமூகத்தில் உள்ள ஜாதி பாகுபாடும் தீண்டமையும்.

தீண்டாமையும், ஜாதியைக்காட்டி ஏற்றத்தாழ்வு கூறுவதும் மக்கள் மனங்களில் உள்ள குறைபாடாகும், இக்குறைபாட்டை இந்துதர்மம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆனால் வர்ணாசிரம தர்மம் இந்துதர்மத்தில் உள்ளது. அது ஒரு சிறந்த சமூகக்கட்டமைப்பு முறை ஆகும். மக்கள் பலர் ஜாதிமுறை, மற்றும் ஜாதிப்பாகுபாடு ஆகியவற்றிற்கும் வர்ணாசிரம முறைக்கும் வேறுபாடுதெரியாமல் இரண்டையும் போட்டு குழப்பிகொள்கின்றனர்

“ஜாதி” எனும் வார்த்தையை ஆராய்ந்து பர்த்தால் அதன் பொருள் பிறப்பை குறிக்கும் “ஜனனம்” என்பதைச் சுட்டும்.அதாவது “ஜாதி” என்பது ஒருவர் பிறந்த குடும்பத்தைக் குறிக்கும்,வம்சாவழியைக் குறிக்கும் சொல்லாகும்.

இப்பொழுது மாறுபாட்டுக்கு உரியதாகக் காணப்படும் வர்ணம் எனும் பதத்திற்கு வருவோம், வர்ணங்களில் 4 பிரிவுகள் உள்ளன. அவை, பிராமண,ஷத்ரிய,வைசிய மற்றும் சூத்ர.

“வர்ண” என்றால் பொதுவாக அது நிறங்களைக் குறிக்கும் வார்த்தை ஆகும். ஆகவே இது தோலின் நிறங்களின் அடிப்படையில் அமைந்த பாகுபாடு என புத்திசாலி வெள்ளைக்கார அறிஞர்கள் தவறாகப் புரிந்துகொண்டு (அல்லது வேண்டுமென்றே),அவ்வாறே அக்கருத்தைப் பரப்பிவிட்டனர் .

“வர்ண”  என்பதன் முதன்மைப் பொருள் “தேர்வு” என்பதாகும்,எடுத்துக்காட்டாக பெரியவர்கள் பார்த்து நடத்திவைக்கும் திருமணங்களில் பொருத்தமான பெண் அல்லது பிள்ளையை தேடும்பொழுது விருப்பத்தேர்வுநிலையில் உள்ள பெண் அல்லது பிள்ளையைக் குறிக்கப் பயன்படுவது “வர” எனும் வார்த்தையாகும். ஆகவே ”வர”  மற்றும்”வர்ண”  ஆகிய்வற்றின் பொருள் விருப்பத்தேர்வு என்பதாகும்.இதிலிருந்து”வர்ண”  என்பது ஒரு தனிமனிதனின் விருப்பத்தேர்வுக்கு உட்பட்டது என்பது புலனாகும். எந்த ஒரு தனிமனிதனும் தனது விருப்பத்தின்படி மேற்குறிப்பிட்ட 4 வர்ணங்களில் ஏதேனும்ஒன்றைத் தெரிவுசெய்து கொள்ளலாம் எனும் நிலையே பண்டைய இந்தியாவில் இருந்தது.

ஜாதி-வர்ண அமைப்பில், ஜாதி ஒருவருடைய குடும்பத்தை, பிறப்பை, வம்சத்தைக் குறிக்கக்கூடியது.ஆகவே ஒருவரது வாழ்க்கை முழுவதும் மாறாதது. வர்ணம் ஒருவர், தனது விருப்பத்தைப் பொருத்து தேர்வுசெய்யக் கூடியது. இவ்வாறுதான் இந்த சமுதாயம் மைக்கப்பட்டு கடந்த 5000 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த ஒருவர் தனது பெற்றோர் கடைபிடித்த வர்ணத்தை,தனது ஜாதியைச் சார்ந்த பலர் மேற்கொண்ட வர்ணத்தைக் கடைபிடிப்பது இயல்பு, அதனால் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தபலர் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தைக் கடைபிடித்தனர் இதனாலும் ஜாதி-வர்ண அமைப்பு பற்றி குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் எந்த ஜாதியில் பிறந்து எந்த வர்ணத்தை மேற்கொண்டாலும் அதிலிருந்து விருப்பப்பட்ட வர்ணத்திற்கு மாறிக்கொள்ளலாம் எனும் நிலை நமது சமுதாயத்தில் இருந்து வந்துள்ளது.

மேலும் வர்ணப்பிரிவு என்பது செய்யும் தொழிலின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும். மேற்கண்ட நடைமுறை மூலம் சமுதாயத்திற்கு வேண்டிய தொழில் அறிவு இடையறாது பேணப்பட்டு வந்தது.

நமது வரலாற்றில் ஒரு வர்ணத்திலிருந்து வேறு வர்ணத்திற்கு மாறிய மாமனிதர்கள் பலர் உள்ளனர்- மாமன்னர்கள்,ரிஷிகள்,பெரும் வியாபாரிகள் பலர் இவ்வாறு வந்தவர்கள்தான்.

ஆழ்ந்து நோக்கும்போது இந்துக்களின் வாழ்வில் சில பொதுவியல்புகளைக்காணலாம்

அவை மனிதனின் வாழ்வில்காணப்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு அவனது கர்மமே (செய்வினைப்பயன்) காரணம் என்பதும் இறை அருளாள் அதிலிருந்து விடுபட்டுய்யலாம் எனும் நம்பிக்கை.

மறுபிறப்பு என்பது வினைப்பயனால் ஏற்படுகிறது, வினைப்பயனிலிருந்து விடுபடும்போது பிறப்பு இறப்பில்லானிலையை அடையமுடியும் எனும் நம்பிக்கை.

தான் உலகவாழ்வில் செய்த வினைகளுக்குத் தக்கபடி இறப்புக்குப்பின் நரகமோ சொர்க்கமோ வாய்க்கும் என்பதும், அவ்வினைப்பயன் முடிந்தால் மீண்டும் பிறப்புவாய்க்கும் எனும் நம்பிக்கை. ஒரு இந்துவைப்பொருத்த அளவில் சொர்க்கம் இறுதியன உயர்னிலை அல்ல

இந்துக்கள் அனைவரும் நான்கு உறுதிப்பொருள்களைக் கூறுவர் அவை

1) அறம்

2) பொருள்

3) இன்பம்

4) வீடு

ஆகியன

ஒருவர் வாழ்வில் இந்த நான்கையும் மேற்கொண்டு வாழ்ந்தால் வாழ்வில் நிறைவடையமுடியும் என்பதால் இவற்றை உறுதிப்பொருள் எனப் பெரியோர் கூறுவர் இதையே ஔவையார்

ஈதல் அறம்;தீவினைவிட்டு ஈட்டல் பொருள்

காதலிருவர் கருத்தொருமித்து-ஆதரவு

ட்டதே இன்பம் பரனைநினைத்து இம்மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு

எனக் கூறுகிறார். இந்நான்கு உறுதிப் பொருள்களிலும் அறம், பொருள், இன்பம் இம்மூன்றையும் திரிவர்க்கம் – முப்பால் என வழங்குவர், இம்மூன்றும் முறையாக அமையும்பொழுது அது நம்மை வீட்டின்பத்தை நோக்கி செலுத்தவல்லதாகும்.

ஆழ்ந்து நோக்கும்போது பரனை நினைத்து இம்மூன்றையும் விடுதல் என்பது இம் மூன்று உறுதிப்பொருள்களையும் கைகொள்ளும்போது ஒருவர் தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை இறைவனிடம் சமர்ப்பித்து மனதில் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுதலை அடைதல் வேண்டும் எனும் வழிகாட்டுதலாகத் தெரிகிறது. இதுவே வேதங்கள் காட்டும் நெறியும் ஆகும்.

வர்ணாசிரம தருமத்தில் கூறப்படும் ஆசிரமம் எனும் நெறியில் கிருஹஸ்தன் எனப்படும் இல்வாழ்க்கை வாழ்பவருக்கு கூறப்பட்ட வாழ்வியல்முறை இது.

இங்கு ஆசிரமம் என்பது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை நான்காகப் பிரிப்பது ஆகும்.

அவை

1. பிரம்மச்சர்யம்

2. கிருஹஸ்தம்

3. வானப்ப்ரஸ்த்தம்

4.சந்நியாசம்

ஆகியனவாகும், இல்லறவாழ்வு வாழ்பவர் மற்ற மூன்று நெறிகளைக் கைக்கொண்டு வாழ்பவர்கட்கு உறுதுணையாய் இருத்தல் வேண்டும் இதனையே வள்ளுவர் பெருந்தகை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

என்று கூறியுள்ளார்.

ஆனால் இன்று சிலர் தர்ம சாஸ்திரங்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதால் அவை தமிழருக்கு அன்னியமானவை என்று தவறான பிரச்சாரத்தைப் பரப்புகின்றனர் உண்மையில் இந்தியமக்கள் அனைவரும் ஒரே இனத்தின் வழித் தோன்றல்கள்தான் அனைவருக்கும் பொதுவானதொரு மொழியில்தான் சாஸ்திரங்கள் அமையவேண்டும், இந்தியர் அனைவருக்கும் பொதுவானது சமஸ்கிருதம் ஆகவே அம்மொழியில் சாஸ்திரங்கள் அமைந்திருப்பதே முறையானது. அல்லாமல் ஒவ்வொருமொழிக்கும் ஒரு சாஸ்த்திரம் அமையுமானால் மக்கள் அவற்றை பலவிதமாகப் பொருள்கொள்வர் முடிவில் குழப்பம்தான் மிஞ்சும்.

நம்முன்னோர்கள் அத்தகைய தெய்விக நெறியை சமஸ்கிருதத்தில் பேணிவருவதோடல்லாமல் அம்மொழியையும் அதில் உள்ள சாஸ்திரங்களையும் மூலமாக வைத்ததோடல்லாமல் அவற்றைப் பலமொழிகளிலும் ஆக்கிவைத்தனர். இவ்வேற்பாட்டினால் பொருள்காணுவதில் ஏதேனும் ஒருமொழியில் குழப்பம் ஏற்பட்டால் அதை சமஸ்கிருத மூலத்துடன் ஒப்பிட்டு தெளிவுபெற நமக்கு வழிவகை கிடைத்துள்ளது

ஆகவே நமது முன்னோர்கள் காட்டிய தெய்வநெறி நின்று இப்பூவுலகில் அனைவரும் வாழ்வாங்கு வாழ்ந்து மேன்மை அடைய எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிவானாக.